செய்திகள்

இந்தூரில் சிக்சர் மழை: யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா

Published On 2017-12-23 10:03 GMT   |   Update On 2017-12-23 10:03 GMT
இந்தூரில் நேற்று இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட்டில் 10 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 172 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 10 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா, ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு யுவராஜ்சிங் 7 சிக்சர் அடித்ததே அதிகபட்ச சிக்சராக இருந்தது. ரோகித் சர்மா நேற்று யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.



இந்த வருடத்தில் மூன்று வடிவிலான போட்டியில் ரோகித் சர்மா 64 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 2015-ம் ஆண்டில் 63 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

மேலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 2-வது சதம் இதுவாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 106 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களான நியூசிலாந்தின் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், நியூசிலாந்தின் கொலின் முன்ரோ ஆகியோரின் சாதனையை (இவர்களும் தலா 2 சதம்) சமன் செய்துள்ளார்.
Tags:    

Similar News