செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி பலியான டெல்லி மாணவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது

Published On 2017-12-17 09:49 GMT   |   Update On 2017-12-17 09:49 GMT
ஆஸ்திரேலியாவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த டெல்லி மாணவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.

புதுடெல்லி:

பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது.  இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். 

இந்திய சார்பில் 120 பள்ளி மாணவ, மாணவியர் ஹாக்கி, கால்பந்து உட்பட ஆறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த சனிக்கிழமை அனைவரும் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது 5 மாணவிகள் அலைகளில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு நான்கு மாணவிகளை உயிருடன் மீட்டனர். இருப்பினும் சிறுமிகளுக்கு இடையேயான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15) என்ற மாணவியின் சடலம் பாறைகளுக்கு இடையே கடந்த ஞாயிறு அன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்தார். இதையடுத்து  விசாரணை நடத்த இந்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. 



இந்நிலையில் அந்த மாணவியின் உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டது. டெல்லியின் கார்வால் பகுதியில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். அந்த மாணவி உயிரிழந்த அதே பகுதியில் கடந்த ஆண்டும் ஒரு 11 வயது சிறுவன் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News