செய்திகள்

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி

Published On 2017-12-11 04:25 GMT   |   Update On 2017-12-11 04:25 GMT
இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பும்ரா அவுட் என நடுவர் தனது விரலை உயர்த்தி அறிவிக்கும் முன்னரே டோனி டி.ஆர்.எஸ் சைகையை காட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தர்மசாலா:

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையாள்வதில் இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கில்லாடி. அதனால் தான் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை சில சமயம் ‘டோனி ரிவியூ சிஸ்டம்’ என்று வர்ணிப்பது உண்டு. டோனியின் புத்திகூர்மையை, தர்மசாலா ஒரு நாள் போட்டியிலும் காண முடிந்தது.

இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பதிரானா (33-வது ஓவர்) வீசிய பந்தை பும்ரா எதிர்கொண்ட போது பந்து அவரது காலுறையில் (பேடு) பட்டது. உடனே இலங்கை வீரர்கள் அவுட் கேட்டு முறையிட, நடுவர் விரலை பாதி அளவுக்கு தான் உயர்த்தியிருப்பார். அதற்குள் எதிர்முனையில் நின்ற டோனி, டி.ஆர்.எஸ். சைகையை காட்டி விட்டார். பிறகு ‘ரீப்ளே’யில் பந்து ஆப்-சைடுக்கு வெளியே செல்வது தெரிந்ததால் பும்ரா நாட்-அவுட் என்று அறிவிக்கப்பட்டது.



இந்த ருசிகர காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல ரசிகர்கள், ‘நடுவரை விரலை முழுமையாக உயர்த்த விடுங்கப்பா.... அதற்குள் என்ன அவசரம்....’ என்று ஜாலியாக பதிவிட்டுள்ளனர். இன்னொரு ரசிகர், ‘டோனி கள நடுவராக பணியாற்றினால் 3-வது நடுவர் மற்றும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திற்குரிய செலவினங்கள் மிச்சமாகி விடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News