செய்திகள்

புரோ கபடி லீக் போட்டியில் 5 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி

Published On 2017-10-12 06:52 GMT   |   Update On 2017-10-12 06:52 GMT
புரோ கபடி பிளேஆப் சுற்றுக்கு குஜராத், அரியானா, புனே, பெங்கால், பாட்னா, ஆகிய 5 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.
ஜெய்ப்பூர்:

5-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் 11-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணிக்கும் 22 லீக் ஆட்டங்கள் இருக்கும்.

இதுவரை 5 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் ஒரே ஒரு அணிதான் தகுதி பெற வேண்டும்.

‘ஏ’ பிரிவில் இருந்து குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட், அரியானா ஸ்டிலர்ஸ், புனேரி பல்டான் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

குஜராத் அணி 20 ஆட்டத்தில் 13 வெற்றி, 4 தோல்வி, 3 ‘டை’யுடன் 77 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. அரியானா 74 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு ஒரே ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது.

புனே அணி 16 ஆட்டத்தில் 12 வெற்றி, 5 தோல்வி, 4 டிராவுடன் 63 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் 6 ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதனால் புனே அணி முதல் இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

அந்த பிரிவில் முன்னாள் சாம்பியனான மும்பை, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி அணிகள் வாய்ப்பை இழந்தன.

‘பி’ பிரிவில் பெங்கால் வாரியர்ஸ் 69 புள்ளியுடன் முதல் இடத்திலும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் 67 புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன.

இந்த பிரிவில் இருந்து இன்னும் ஒரே ஒரு அணி தகுதி பெற வேண்டும். உ.பி. யோதா 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 3 போட்டி உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் 49 புள்ளியுடனும், பெங்களூர் அணி 44 புள்ளியுடனும், தமிழ் தலைவாஸ் 40 புள்ளியுடனும் உள்ளன.

தெலுங்கு டைட்டன்சுக்கு ஒரே ஒரு ஆட்டமும், பெங்களூருக்கு 3 ஆட்டமும், தமிழ் தலைவாஸ் அணிக்கு 2 ஆட்டமும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டத்திலும் வென்றாலும் பலன் இல்லை.

‘பி’ பிரிவில் இருந்து 3-வது அணியாக உ.பி. யோதா தகுதி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. அந்த அணி ஒரு ஆட்டத்தில் வென்றாலே தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம். பெங்களூர் அணி எஞ்சிய 3 ஆட்டத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் தனது கடைசி ஆட்டத்திலும் வெல்ல வேண்டும்.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 121-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோதா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News