செய்திகள்

உலக தடகள போட்டி: 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரருக்கு தங்கம்

Published On 2017-08-09 06:55 GMT   |   Update On 2017-08-09 06:55 GMT
லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில், நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்க பதக்கம் வென்றார்.
லண்டன்:

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் வான் நியரிக் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 43.98 வினாடியில் கடந்தார். பகாமஸ் வீரர் ஸ்டீபன் 44.41 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தாரை சேர்ந்த ஹாரூன் 44.48 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர் பியா அம்ரோஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 44.67 வினாடியில் கடந்தார். போலந்து வீரர் ஆடம் காஸ்கோட் வெள்ளியும் (1 நிமிடம்44.95 வினாடி), கென்யாவை சேர்ந்த கிபியான் பெட் வெண்கலமும் (1 நிமிடம் 45.21 வினாடி) பெற்றனர்.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் கென்யா வீரர் கிப்ருட்டோ 8 நிமிடம் 14.12 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.

மொராக்கோவை சேர்ந்த எல்பார்லி 8 நிமிடம் 14.49 வினாடியில் கடந்து வெள்ளி பதக்கமும், அமெரிக்க வீரர் இவன் ஜாக்கா 8 நிமிடம் 15.33 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

போல்ட் வால்ட் பிரிவில் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) அமெரிக்க வீரர் சாம் சென்டிரிக்ஸ் 5.95 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்தார். போலந்து வீரர் லிசெக் (5.89 மீட்டர்) 2-வது இடத்தையும், பிரான்சை சேர்ந்த ஹவல்லெனி (5.89 மீட்டர்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

பெண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை பார்பரா ஸ்பாட்கோவா தங்கம் வென்றார். அவர் 66.76 மீட்டர் தூரம் எறிந்தார். சீனாவுக்கு வெள்ளி, வெண்கலம் கிடைத்தன.

இன்று ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், பெண்களுக்கான 400 மீட்டர், குண்டு எறிதல் நடக்கிறது. இதேபோல ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதியும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News