செய்திகள்

பிளேஆப் சுற்றில் நுழைய 4 அணிகள் போட்டி: மும்பை மட்டுமே தகுதி பெற்றுள்ளது

Published On 2017-05-13 05:33 GMT   |   Update On 2017-05-13 05:33 GMT
‘பிளே ஆப்’ சுற்றில் நுழைய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி தொடங்கியது.

இதில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத், 2 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஅப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 52 ‘லீக்‘ ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி, குஜராத், பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

‘பிளே ஆப்’ சுற்றில் நுழைய கொல்கத்தா, புனே, ஐதராபாத், பஞ்சாப் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் 3 அணிகள் தகுதி பெறும்.



இன்று நடைபெறும் குஜராத்- ஐதராபாத் (மாலை 4 மணி), கொல்கத்தா -மும்பை (இரவு 8 மணி) நாளை நடைபெறும் புனே- பஞ்சாப் (மாலை 4 மணி) ஆகிய 3 ஆட்டங்கள் முடிவை நிர்ணயிக்கும். இதனால் இந்த ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

2012 மற்றும் 2014-ல் ஐ.பி.எல். கோப்பையை வென்ற காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ‘பிளேஆப்’ சுற்றில் நுழைவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள அந்த அணி இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தினால் ‘பிளேஆப்’ சுற்றில் நுழையும். தோற்றாலும் அந்த அணிக்கு பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை. மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ரன்ரேட் நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணி தகுதிபெறுவது சிக்கல் இல்லை. +0.729 ஆக கொல்கத்தாவின் ரன்ரேட் உள்ளது.

முதல் 2 இடங்களை பிடிப்பதுதான் சாதகமானது என்பதால் கொல்கத்தா அணி, மும்பையை வீழ்த்தி 18 புள்ளிகளை பெற முயற்சிக்கும்.

புனே அணி, 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி, குஜராத்தை வீழ்த்தினால் அந்த அணி நாளை பஞ்சாப்பை கண்டிப்பாக வென்றாக வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ரன்ரேட்டில் பின்தங்கி இருக்கிறது. -0.083 ஆக ரன்ரேட் உள்ளது.

இன்றைய ஆட்டத்துக்கு தகுந்தவாறு நாளை அந்த அணி ஆடும்.

ஐதராபாத் அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தினால் ஐதராபாத் அணி தகுதி பெற்று விடும். தோல்வியை சந்தித்தால் நாளைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி புனேயிடம் தோற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நிலை ஏற்படும்.

பஞ்சாப் அணி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று உள்ளது. கடைசி ஆட்டத்தில் புனேயை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்று, நாளைய ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வி அடைந்தால் கொல்கத்தா, புனே, ஐதராபாத் அணிகள் தகுதி பெறும்.

ஐதராபாத் தோற்று, பஞ்சாப் வென்றால் கொல்கத்தா, புனே, பஞ்சாப் அணிகள் தகுதி பெறும்.

ஐதராபாத் வென்று, பஞ்சாப்பும் வென்றால் ரன்ரேட் அடிப்படையில் புனே அணி வெளியேற்றப்படும்.

நாளை இரவு பெங்களூர்- டெல்லி இடையேயான ஆட்டத்தின் முடிவில் எந்த பாதிப்பும் இல்லை.

Tags:    

Similar News