செய்திகள்

3-வது டி20 போட்டியில் வெற்றி: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை வென்றது இலங்கை

Published On 2017-01-26 09:49 GMT   |   Update On 2017-01-26 09:49 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-1 எனத் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக்கைப்பற்றியது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இலங்கை அணியும் வென்றிருந்தது. 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பெஹார்டியன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஸ்மட்ஸ், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவரில் 36 ரன்கள் சேர்த்தது. ஸ்மட்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த டி வி்ல்லியர்ஸ் 44 பந்தில் 63 ரன்கள் குவித்தார். ஹென்ரிக்ஸ் 34 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார். 6-வது வீரராக களம் இறங்கிய மோசெலே ஆவுட்டாகாமல் 15 பந்தில் 32 ரன்கள் குவிக்க, தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 11 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த சண்டிமால் 5 ரன்னிலும், டி சில்வா 19 ரன்னிலும் வெளியேறினார்கள். ஆனால் டிக்வெல்லா 51 பந்தில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார்.

5-வது வீரராக களம் இறங்கிய பிரசன்னா 16 பந்தில் 37 ரன்னும், குணரத்னே 6 பந்தில் 11 ரன்களும் எடுக்க, இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. டிக்வெல்லா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 28-ந்தேதி போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது.

Similar News