செய்திகள்

இங்கிலாந்து தொடர் முழுவதிலும் ரோகித் சர்மா நீக்கம்: தொடைப்பகுதி காயம் குணமடையவில்லை

Published On 2016-11-02 15:55 GMT   |   Update On 2016-11-02 15:55 GMT
ரோகித் சர்மாவின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முழுவதிலும் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 9-ம்தேதி முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா இடம்பெறவில்லை.

விசாகப்பட்டினத்தில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியபோது ரோகித் சர்மாவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடையாததால் உடற்தகுதி பெறவில்லை.

காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்தார்.

இதுவரை அவர் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1184 ரன்கள் சேர்த்துள்ளார். 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Similar News