செய்திகள்

மாரத்தான் பந்தயத்தில் மூன்று சகோதரிகள் பங்கேற்பு

Published On 2016-07-30 04:45 GMT   |   Update On 2016-07-30 04:45 GMT
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகள் (ட்ரியோ) ஒருசேர களம் காணும் அதிசயமான சம்பவம் அரங்கேற இருக்கிறது.
டாலின் :

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் ஒரே நேரத்தில் இரட்டையர்கள் பங்கேற்பது அரிய விஷயமாகும். ஆனால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெறும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகள் (ட்ரியோ) ஒருசேர களம் காணும் அதிசயமான சம்பவம் அரங்கேற இருக்கிறது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள எஸ்தோனியா நாட்டை சேர்ந்த 30 வயதான லில்லி, லினா, லெய்லா லுயிக் ஆகிய 3 சகோதரிகள் தான் இந்த ஆச்சரியமான சாதனையை படைக்க இருப்பவர்கள். மூவரும் பெண்களுக்கான மாரத்தான் பந்தயங்களில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

அச்சில் வார்த்தது போல் ஒரே மாதிரியான முகம் மற்றும் உடல் தோற்றத்தை கொண்ட இந்த முச்சகோதரிகள் பந்தய தூரத்தை 2 மணி 37 நிமிடத்தில் கடந்து இருக்கிறார்கள். இது கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் எடுத்து கொண்ட நேரத்தை விட 15 நிமிடம் அதிகமாகும்.

இதனை வைத்து பார்க்கையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் இவர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்றாலும் ஒரு ஒலிம்பிக் போட்டியில் மூன்று சகோதரிகள் ஒன்றாக பங்கேற்பதன் மூலமே சாதனை பட்டியலில் தடம் பதிக்க இருக்கிறார்கள்.

Similar News