இந்தியா

மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டுவிடுவார்களா?: சித்தராமையா

Published On 2022-08-20 04:03 GMT   |   Update On 2022-08-20 04:03 GMT
  • மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை போற்றுகிறார்கள்.
  • மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

சிக்கமகளூரு :

குடகில் கார் மீது முட்டை வீசிய சம்பவம் குறித்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு எதிராக நடக்கும் போராட்டம் மற்றும் என் கார் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் கர்நாடகத்தை ஆளும் பா.ஜனதா அரசால் அரங்கேற்றப்பட்டது. இதன் பின்னணியில் மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர்களும், அவர்கள் சார்ந்த அமைப்பும் உள்ளது.

திதிமதியில் எனக்கு எதிராக 10 இளைஞர்கள் கோஷமிட்டனர். சிக்கமகளூருவில் 4 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் திரண்டிருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை. முதல்-மந்திரி வந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட போலீசார் அனுமதிப்பார்களா?. ஏன் அவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்யவில்லை. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனம் செலுத்தாதது ஏன்?.

எனக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள, சங்க் பரிவார் ஆகிய அமைப்புகளுடன் போலீஸ் சூப்பிரண்டு கைகோர்த்துள்ளார். அவர்கள் போராட்டம் நடத்த போலீஸ் சூப்பிரண்டே அனுமதித்துள்ளார். இது மாநில அரசால் நடத்தப்பட்ட போராட்டம்.

எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது அரசின் வேலை. அதை அரசு செய்ய தவறி விட்டது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இது ஒரு மோசமான ஊழல் அரசு. கர்நாடகத்தில் அரசும், சட்டமும் - ஒழுங்கும் செத்துவிட்டது. எனக்கு சாவர்க்கர் மீது தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விரோதமோ, கோபமோ இல்லை. அவரும் ஒரு மனிதர் தான். ஆனால் அவரது கொள்கைகளை நான் எதிர்க்கிறேன்.

எனக்கு எதிராக போராடியவர்கள் சாவர்க்கரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தி உள்ளனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து நிற்காமல் தன்னை மன்னித்துவிடும்படி கேட்ட சாவர்க்கரை இவர்கள் வீரசாவர்க்கர் என்று கொண்டாடுகிறார்கள். மேலும் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை போற்றுகிறார்கள். என்னை மட்டும் இவர்கள் விட்டுவிடுவார்களா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News