இந்தியா

ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் என்ன?

Published On 2022-07-26 02:18 GMT   |   Update On 2022-07-26 02:18 GMT
  • அரசின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.
  • முப்படைகளின் தலைமை தளபதியும் அவரே.

புதுடெல்லி :

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றிருக்கும் நிலையில், இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்த ஒரு பார்வை:-

அரசின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் தலைவர் என்ற முறையில் அவரே அரசியல்சாசனத்தின் பாதுகாவலராக உள்ளார். முப்படைகளின் தலைமை தளபதியும் அவரே.

மந்திரிசபையின் பரிந்துரையின் பேரில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும், பாராளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தை தவிர மற்ற எந்த நேரத்திலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அதிகாரம் கொண்டிருக்கிறார். நிதி மசோதாக்களை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் பெற்றவராகிறார்.

மன்னிப்பு, அவகாசம் அல்லது தண்டனையில் இருந்து விடுவித்தல் அல்லது இடைநீக்கம் செய்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தண்டனைகளை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் என பல்வேறு அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதி. போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் நாடு அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பிரதமர் தலைமையிலான மந்திரிசபையின் பரிந்துரையின் பேரில் அவசரநிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்.

மேற்கண்ட அதிகாரங்கள் உள்பட மேலும் பல்வேறு அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கிறார்.

Tags:    

Similar News