இந்தியா

விழிஞ்ஞம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி.

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்- கைதானவர்களை விடுவிக்க கோரி போலீஸ் நிலையம் சூறை

Published On 2022-11-28 06:07 GMT   |   Update On 2022-11-28 06:07 GMT
  • விழிஞ்ஞம் துறைமுகத்தை ஆதரித்து ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
  • போராட்டத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே தகராறு மூண்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் குமரி மாவட்ட எல்லையை யொட்டியுள்ள விழிஞ்ஞத்தில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்துறைமுகம் அமைக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த கடற்கரை கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு லத்தீன் கத்தோலிக்க பாதிரியார்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தை ஆதரித்து ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்து வந்தனர். நேற்று போராட்டத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே தகராறு மூண்டது.

இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் அங்கு வன்முறை வெடித்தது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதால் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் 5 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இத்தகவல் அறிந்து நேற்றிரவு விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் முன்பு போராட்டக்காரர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

போலீஸ் நிலையம் முன்பு திரண்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவித்தால் மட்டுமே அங்கிருந்து செல்வோம் என போராட்டக்காரர்கள் கூறினர்.

இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து சூறையாடினர். இதில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. மேலும் கல்வீச்சில் 36 போலீசார் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சமரச பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே இன்றும் சமரச பேச்சு தொடரும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் திருவனந்தபுரம் லத்தீன் கத்தோலிக்க பேராயர் தாமஸ் ஜே நெட்டோ மற்றும் 15 பாதிரியார்கள் மீதும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே போலீசார் பிடித்து சென்ற 5 பேரில் 4 பேரை இன்று அதிகாலை விடுவித்தனர். இதுபற்றிய தகவல் போராட்டக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் அங்கு இன்று அமைதி பேச்சுவார்த்தைக்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags:    

Similar News