இந்தியா

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயம் என பேச்சு- பவன் கல்யாணுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Published On 2023-07-11 04:41 GMT   |   Update On 2023-07-11 05:05 GMT
  • அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
  • 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:-

ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .

விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.

நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள்.

அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News