இந்தியா

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை.. மத்திய மந்திரி பியூஷ் கோயல் விளக்கம்

Published On 2023-07-02 07:34 GMT   |   Update On 2023-07-02 07:34 GMT
  • மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது.
  • விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், "பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத் தொடங்கியவுடன் விலை குறையும். அதேசமயம் கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது பெரிய வித்தியாசம் இல்லை. உருளைக்கிழக்கு மற்றும் வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது" என்றார்.

Tags:    

Similar News