பா.ஜனதா வெற்றிக்கும் பங்கு சந்தை நிலவரத்துக்கும் தொடர்பில்லை: அமித்ஷா
- நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
- பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன.
புதுடெல்லி:
பங்கு சந்தை வர்த்தகம் கடந்த வாரம் சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றார்கள். புதிதாக முதலீடு செய்யவும் தயங்குகிறார்கள்.
இதற்கு காரணம் தேர்தல் தான் என்றும் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறது. எனவே பங்கு சந்தை சரிவை சந்திப்பதாகவும் எதிர்கட்சிகள் தகவல் பரப்பியது.
ஆனால் சர்வதேச அளவிலான சாதகமற்ற நிலவரமும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றமும் தான் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துக்கு காரணம் என்று பங்கு சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் பங்கு சந்தை நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
பங்கு சந்தையை தேர்தலுடன் இணைக்கக் கூடாது. ஆனால், நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பா.ஜ.க. கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன்பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.