இந்தியா

உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம்- நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, தலைவர்கள் பாராட்டு

Published On 2022-07-24 09:11 GMT   |   Update On 2022-07-24 09:11 GMT
  • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்திருந்தார்.
  • இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம் என மோடி பாராட்டு

சென்னை:

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஈட்டி எறியும் வீரரான அவர் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்து இருந்தார்.

உலக தடகள சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையிலும் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி கடுமையாக இருந்தபோதும் நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக கடுமையாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணமாகும். வருங்காலங்களில் நீரஜ் சோப்ரா இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மீண்டும் ஒருமுறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் 2-ம் இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அவருக்கு என் பாராட்டுக்கள்.

உலக அரங்கில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து சாதித்து வரும் உயர்சிறப்பான சாதனைகளால் இந்தியா பெருமை அடைகிறது.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

நீரஜ் சோப்ராவின் சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்களில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.

நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Tags:    

Similar News