இந்தியா

திம்மப்பாவையும், அவர் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட நாணயங்களையும் படத்தில் காணலாம்.

பாகல்கோட்டையில் முதியவரின் வயிற்றில் இருந்த 187 நாணயங்கள்

Published On 2022-11-28 03:36 GMT   |   Update On 2022-11-28 03:36 GMT
  • திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது.

பாகல்கோட்டை :

ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன் (வயது 60). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா தினமும் மதுகுடித்து வந்தார். இந்த நிலையில் திம்மப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் நாணயங்களை விழுங்கி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது திம்மப்பாவின் வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நாணயங்களை அகற்றாவிட்டால் திம்மப்பா உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து திம்மப்பா பாகல்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் வயிற்றில் இருந்த நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று திம்மப்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவர் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அகற்றினர். அந்த நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தது. திம்மப்பாவின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் 56-ம், 2 ரூபாய் நாணயங்கள் 51-ம், 1 ரூபாய் நாணயங்கள் 80-ம் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Similar News