இந்தியா

Image source: Twitter user @KanwardeepsTOI

பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை- 28 ஆண்டுக்கு பிறகு தாய்க்கு நீதி கிடைக்க சட்டப்போராட்டம்

Published On 2022-08-04 14:27 GMT   |   Update On 2022-08-04 14:27 GMT
  • பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டி உள்ளனர்.
  • குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரியல் தந்தை என உறுதியானது.

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தை, 28 ஆண்டுகளுக்கு பின் தன் தாயை கண்டுபிடித்து நீதி கிடைக்க போராடிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அவர்களுடன் முகமது ரஜி என்ற குட்டு ஹசன் மற்றும் நாக்கி ஹசன் ஆகிய இரு சகோதரர்கள் நெருங்கி பழகியுள்ளனர். ஓரளவு பரிச்சயம் ஆனதும், அந்த குடும்பத்தினரின் நம்பிக்கையை அவர்கள் பெற்றுள்ளனர். அதனை பயன்படுத்தி கொண்டு அந்த குடும்பத்தில் இருந்த சிறுமியை 2 பேரும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதில், 12 வயதில் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்ததும், அதனை தத்து கொடுக்க கூறி மிரட்டிய முகமது ரஜி, போலீசுக்கு போக கூடாது என எச்சரிக்கையும் விடுத்து உள்ளார். இந்த சம்பவம் 1994ல் நடந்துள்ளது.

சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனது. 2021-ம் ஆண்டு அந்த சிறுமியின் மகன், பாதிக்கப்பட்ட தனது தாயாரை அலைந்து, தேடி கண்டுபிடித்து உள்ளார். நடந்த குற்ற சம்பவத்திற்கு நீதி கிடைக்க முயற்சிக்கும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.

இதன்பின் நடந்த விசயங்களை பற்றி ஷாஜகான்பூர் சிறப்பு போலீஸ் சூப்பிரெண்டு எஸ். ஆனந்த் விவரிக்கிறார். அவர் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு மார்ச் 4ல் ஷாஜகான்பூரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்னர், கோர்ட்டு உத்தரவின்படி, இந்த குற்ற சம்பவம் எனது கவனத்திற்கு வந்தது. குற்றவாளிகளின் முழுமையான பெயர் தெரியவில்லை. அவர்களது முகவரியும் அப்போது பதிவு செய்யப்படவில்லை. இது முற்றிலும் ஒரு பழைய வழக்கு. ஆனால், புகாரானது உண்மை தன்மை வாய்ந்தது போல் தோன்றியது. அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஏனெனில் குழந்தை பருவத்தில் இருந்தே அவர் பல வகையில் பாதிக்கப்பட்டு போயுள்ளார். ஒரு விரிவான தேடுதலுக்கு பின்னர், குற்றவாளிகளான சகோதரர்களை நாங்கள் அடையாளம் காண முடிந்தது. அவர்கள் ஹடாப் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அவர்களை அதிகாரிகள் நெருங்கி விசாரிக்கும்போது, அப்படி ஒரு பெண்ணை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மரபணு சோதனை நடந்தது. 2021-ம் ஆண்டு ஜூலையில் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் முடிவுகள் வெளிவந்தன. அதில், குற்றவாளி முகமது ரஜி என்பவரே பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கு உயிரியல் தந்தை என உறுதியானது. உடனடியாக கோர்ட்டில் இருந்து வாரண்ட் பெற்று அவரை கைது செய்ய காவலர்கள் முயன்றனர். ஆனால், அதற்கு முன்பே அவர்கள் தப்பி விட்டனர். கிட்டத்தட்ட வழக்கு முடிவடையும் சூழலை நாங்கள் நெருங்கி இருந்தோம். இதனால், பல தனிப்படைகளை அமைத்து பல்வேறு இடங்களில் சகோதர்கள் இருவரையும் தேடினோம். இருவரின் இருப்பிடம் பற்றி அறிவதில் கண்காணிப்பு குழுவின் பணி முக்கியம் வாய்ந்தது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களை கண்டறிவது அவ்வளவு எளிய பணியல்ல.

இறுதியாக, முகமது ரஜி கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2வது குற்றவாளியான, நாக்கி ஹசன் ஒடிசாவில் மறைந்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை தேடும் பணி தொடர்கிறது.

இவ்வாறு சிறப்பு எஸ்.பி. கூறியுள்ளார்.

12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது தாயை, தனித்து விடப்பட்ட அவரது மகன் 28 ஆண்டுகளுக்கு பின் தேடி கண்டுபிடித்து நீதி கிடைக்க உதவிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டுகிறது.

Tags:    

Similar News