இந்தியா

டெல்லியில் 468 மது கடைகள் மூடல்: சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி

Published On 2022-08-01 12:19 GMT   |   Update On 2022-08-01 12:19 GMT
  • மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது.
  • டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பிப்பு

புதுடெல்லி:

டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோல தனியார் அமைப்புகளும் கடைகள் நடத்தி வருகிறார்கள். இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதற்கிடையே கலால் துறையில் புதிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் அமல் படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது.

இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது.

இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே டெல்லி கலால் துறை மந்திரியும், துணை முதல்வருமான மணிஸ் சிசோடியா, டெல்லியில் சட்டவிரோத மதுபானம் விற்பனையை கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News