இந்தியா
உத்தவ் தாக்கரே அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரேக்கு அன்னா ஹசாரே கடிதம்

Published On 2022-05-18 02:24 GMT   |   Update On 2022-05-18 02:24 GMT
மராட்டியத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற லோக் அயுக்தா சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கிறேன். 85 வயதில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சாத்தியமில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுமாறு மாநில அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுங்கள் அல்லது ஆட்சியை விட்டு விலகுங்கள் என மராட்டிய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்து இருந்தார். மேலும் சட்டத்தை இயற்றாவிட்டால் போராட்டம் நடத்த போவதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

லோக் அயுக்தா சட்டத்தை இயற்றுவதற்காக இதுவரை தலைமை செயலர் தலைமையில் 6 கூட்டு வரைவு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 கூட்டு வரைவு குழு கூட்டங்களையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மராட்டியத்தை ஊழலற்ற மாநிலமாக மாற்ற லோக் அயுக்தா சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கிறேன். 85 வயதில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டு லோக் அயுக்தா சட்டத்தை இயற்றக்கோரி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்து அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த வாக்குறுதியின்படி கூட்டு குழு அமைக்கப்பட்டது.
Tags:    

Similar News