search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக் அயுக்தா"

    • தாசில்தார் அஜித்குமார் ராயிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்தார்கள்.
    • 98 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல், முறைகேடு, லஞ்ச புகார்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல், லஞ்ச புகாரில் சிக்கும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு லோக்அயுக்தா போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து நேற்று முன்தினம் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருந்தார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 62 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

    இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து குவியல், குவியலாக தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் லோக் அயுக்தா போலீசாரிடம் சிக்கியது. அந்த ஆவணங்கள், சொத்து பத்திரங்களை லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தினார்கள். மேலும் 15 அரசு அதிகாரிகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய 15 அரசு அதிகாரிகளில் பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராயும் (வயது 42) ஒருவர் ஆவார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய பணம், நகைகள், சொகுசு கார்கள், சொத்து ஆவணங்களை பார்த்து லோக் அயுக்தா போலீசாரே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர்.

    அதாவது தாசில்தார் அஜித்குமார் ராய்க்கு சொந்தமான பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, பசவேசுவராநகர், தொட்டபள்ளாப்பூர், கோலூர் உள்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது.

    சோதனையின் போது அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

    இதுதவிர பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் மட்டும் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் லோக் அயுக்தா போலீசாரிடம் சிக்கி இருந்தது.

    அந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அங்கு குதிரை பந்தயத்தில் பங்கேற்பவர்களுக்காக, குதிரை பந்தய பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்குவதற்கும் தாசில்தார் அஜித்குமார் ராய் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை தாசில்தார் அஜித்குமார் ராய் வாங்கியதும் தெரியவந்தது.

    அதாவது தனது பெயரிலும், தன்னுடைய மனைவி பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் அஜித்குமார் ராய் சொத்துகள் வாங்கி குவித்திருப்பதற்கான ஆவணங்கள் லோக் அயுக்தாவுக்கு சிக்கி இருந்ததால், அவர் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை லோக் அயுக்தா போலீசார் தீவிரமாக எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் நேற்று முன்தினத்தில் இருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து தாசில்தார் அஜித்குமார் ராயிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்தார்கள். அதாவது நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணி முதல் நேற்று காலை 10.30 மணி வரை 30 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. விசாரணையின் போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து நேற்று தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.

    இதுகுறித்து லோக் அயுக்தா போலீஸ் ஐ.ஜி. சுப்பிரமணிய ராய் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்துள்ளதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் சிக்கிய சொத்து பத்திரங்கள், பிற ஆவணங்கள் குறித்து தாசில்தாரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம், என்றார்.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள தாசில்தார் அஜித்குமார் ராயின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக் உத்தரவிட்டு இருக்கிறார். அவரது வங்கி கணக்குகளின் பண பரிமாற்றங்கள் குறித்து லோக் அயுக்தா போலீசார் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைதான தாசில்தார் அஜித்குமார் ராயை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த சொத்துகளை வாங்கியது எப்படி?, அதற்கான வருவாய் ஆதாரங்களை அளிக்கும்படியும் தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்து குவித்த தாசில்தார் கைதாகி இருக்கும் சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கணவருக்கு பரிசாக கிடைத்த பொருட்கள்

    பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கெடிகாரங்கள், பிளாட்டினம் நகைகள், பரிசு பொருட்கள் சிக்கி இருந்தது.

    அதுபற்றி அஜித்குமார் ராயின் மனைவிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரித்த போது, இந்த பொருட்கள் அனைத்தும் தனது கணவருக்கு பரிசாக கிடைத்ததாகவும், அதில் ஒவ்வொரு நபரின் பெயர்கள் எழுதப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் தங்க நகைகள், பிளாட்டினத்தை தாங்கள் விலைக்கு வாங்கியதாகவும் அஜித்குமார் ராயின் மனைவி போலீசாரிடம் கூறி இருக்கிறார்.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தாசில்தார்

    பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாரான அஜித்குமார் ராய் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அதாவது பெங்களூருவில் ரெயின்போ டிரவ் லே-அவுட், சர்ஜாபுரா ரோட்டில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக தாசில்தார் அஜித்குமார் ராய் செயல்பட்டு இருந்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்திருந்தனர். அதன்பிறகு, மீண்டும் பணிக்கு சேர்ந்திருந்த அவர், சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்து வந்தது தெரிந்தது. இதுபற்றி வந்த புகார்களை தொடர்ந்து லோக் அயுக்தா போலீசார் அஜித்குமார் ராய் வீட்டில் சோதனை நடத்தி பணம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×