இந்தியா
ஈஸ்வரப்பா

மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஈசுவரப்பாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

Published On 2022-04-16 03:34 GMT   |   Update On 2022-04-16 03:34 GMT
சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, கற்பழிப்பு சம்பவம் ஒன்று பற்றி பேட்டி அளிக்கும்போது, சித்தராமையாவின் மகளை கற்பழித்தால் அவர் அமைதியாக இருப்பாரா? என்றார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூரு:

கர்நாடக மந்திரிசபையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை மந்திரியாக இருந்தவர், ஈசுவரப்பா. இவர் நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இவர் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர். அவர் 75 வயதை தொடும் நிலையில் உள்ளார். பா.ஜனதாவில் 75 வயது வரை மட்டுமே தேர்தல் அரசியல் நீடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் விதிமுறை உள்ளது. அதில் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிகளை தளர்த்தி 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக எடியூரப்பாவும் கடந்த 2021-ம் ஆண்டு முதல்-மந்திரி பதவியை துறந்தார்.

ஈசுவரப்பாவும் 75 வயதை தொடுவதால், அவருக்கு மீண்டும் மந்திரி பதவியோ அல்லது வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்போ கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஈசுவரப்பாவின் அரசியல் வாழ்க்கை ஏறத்தாழ முடிவுக்கு வருகிறது.

தான் தற்போது எம்.எல்.ஏ. உள்ள சிவமொக்கா தொகுதியில் தனது மகனுக்கு சட்டசபை தேர்தலில் டிக்கெட் பெற ஈசுவரப்பா முயற்சி செய்து வருகிறார். பா.ஜனதாவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறி வருகிறார். அதனால் அவரது மகனுக்கு போட்டியிட டிக்கெட் கிடைக்குமா? என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

ஈசுவரப்பா அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார். அவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் நிருபர்கள் எழுப்பும் கேள்விக்கு சட்டென்று பதிலளித்துவிடுவார். அவ்வாறு அவர் பதிலளிக்கும்போது சில கருத்துகளால் பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது அவர் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

மாநிலத்தில் நடைபெறும் கற்பழிப்பு குறித்து பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதற்கு அவர், "நீங்களே இருக்கிறீர்கள். உங்களை யாராவது கடத்தி சென்று கற்பழித்தால் எதிர்க்கட்சியாக நாங்கள் அதுபற்றி பேசாமல் இருக்க முடியுமா" என்றார். பெண் நிருபரிடம் அவர் அவ்வாறு கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஹிஜாப் சம்பவம் தொடர்பாக போராட்டங்கள் நடந்தபோது, டெல்லி செங்கோட்டையில் காவி கொடி ஏற்றும் நாள் வரும் என்று கூறினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதே போல், பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் ஈசுவரப்பா பேசும்போது, தேர்தலின்போது, ஏதாவது உண்மையோ, பொய்யோ பேசி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும் என்றார். அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
 
சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, கற்பழிப்பு சம்பவம் ஒன்று பற்றி பேட்டி அளிக்கும்போது, சித்தராமையாவின் மகளை கற்பழித்தால் அவர் அமைதியாக இருப்பாரா? என்றார். இந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி பல்வேறு இடங்களில் பேசும்போது, சர்ச்சை கருத்துகளை கூறி விவாதத்திற்கு காரணமாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News