இந்தியா
மத்திய அமைச்சரவை கூட்டம்

எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2022-02-27 00:48 GMT   |   Update On 2022-02-27 00:48 GMT
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை,ரூ.1,600 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று புது டெல்லியில் நடைபெற்றது.  இதில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் நோக்கில் தானியங்கி வழிமுறை மூலம் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

தற்போதைய அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, பொதுத்துறை வங்கிகளுக்கான வெளிநாட்டு முதலீட்டு உச்சவரம்பு 20 சதவீதமாக இருப்பதால், எல்.ஐ.சி. மற்றும் பிற நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எல்.ஐ.சி.யில் தற்போது அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மெகா ஐ.பி.ஓ.வில் பங்கேற்க விரும்புவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும்  ரூ.1,600 கோடியில் செயல்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் கீழ் மக்கள் அனைவரும் தங்களுக்கான சுகாதார கணக்கு எண்ணை பெற முடியும். இதில் அவர்களது ஆரோக்கியம் தொடர்பான அனைத்து விவரங்களும் இணைக்கப்படும். 

இதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முடிவெடுப்பதற்கு இது உதவும் என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News