இந்தியா
பிரதமரை விமர்சித்து எழுதப்பட்ட வாசகங்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார்.

ஓட்டல் முன்பு பிரதமர் மோடியை விமர்சித்து எழுதப்பட்ட வாசகங்களுடன் நின்ற கார்- போலீசார் விசாரணை

Published On 2022-01-10 05:04 GMT   |   Update On 2022-01-10 05:04 GMT
திருவனந்தபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார் உத்தரபிரதேச பதிவு எண் கொண்ட வெள்ளை நிற காராகும். அந்த கார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம், பட்டம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வாலிபர் ஒருவர் காரில் வந்தார்.

அந்த காரில் பிரதமர் மோடியை விமர்சித்து ஆங்கிலத்தில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக கோத்ரா சம்பவம், லக்கீம்பூர் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், புல்வாமா தாக்குதல் குறித்து குற்றம்சாட்டும் கருத்துக்கள் காரில் இடம் பெற்றிருந்தன. மேலும் ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்றும் எழுதப்பட்டிருந்தது.

பாருக்கு வந்தவர்கள், அந்த காரில் எழுதப்பட்ட வாசகங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரில் வெடிகுண்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே ஓட்டல் பாருக்கு சென்ற அந்த வாலிபர் அங்கிருந்த ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதுபற்றி ஊழியர்களும் பட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த வாலிபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார் உத்தரபிரதேச பதிவு எண் கொண்ட வெள்ளை நிற காராகும். அந்த கார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

போலீசார் காரின் உரிமையாளரை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த வாலிபர் பிரதமரை விமர்சித்து காரில் வாசகங்கள் எழுதியது ஏன்? என்பது பற்றியும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News