இந்தியா
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

இந்து கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் - கர்நாடக முதல்வர் அறிவிப்பு

Published On 2021-12-30 10:17 GMT   |   Update On 2021-12-30 10:17 GMT
மதமாற்ற தடைச்சட்ட மசோதா மேல் சபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானதும், அதை அமல்படுத்த ஒரு செயல் படையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்தார்.
பெங்களூரு: 

கர்நாடகத்தில் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசியபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 

“பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும். கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு இதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கோவில் வருமானங்கள் வேறு திட்டங்களுக்கு செல்வதை தடுக்கவும், கோவில் வருமானத்தை அந்த கோவிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்படும்

மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளோம். அதை வருகிற கூட்டத்தொடரில் மேல் சபையில் நிறைவேற்றுவோம். மேல் சபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானதும், அதை அமல்படுத்த சிறப்பு அதிரடிப் படை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பசவராஜ் பொம்மை பேசினார்.

கர்நாடகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News