இந்தியா
யோகி ஆதித்யநாத்

வாஜ்பாய் பிறந்தநாளில் 1 கோடி கல்லூரி மாணவர்களுக்கு செல்போன்-கையடக்க கணினி: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Published On 2021-12-21 09:26 GMT   |   Update On 2021-12-21 09:26 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செல்போன், கையடக்கக் கணினியை வழங்குகிறார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தேர்தலை கருத்தில்கொண்டு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் ஒரு கோடி பேருக்கும் செல்போன் மற்றும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

வருகிற 25-ந் தேதி முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செல்போன், கையடக்கக் கணினியை வழங்குகிறார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

ஐ.டிஐ., பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல் இறுதி ஆண்டு படிப்பு, மருத்துவ உயர்கல்வி இறுதியாண்டு, பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தால் பலன் பெறுவார்கள்.

இதற்காக ஏற்கனவே 38 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டனர். லாவா, சாம்சங், ஏசர் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு செல்போன், டேப்லெட்டை கொள்முதல் செய்ய இருக்கிறது.

இதற்காக முதல் கட்டமாக ரூ.2,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. தலா ரூ.10,740 விலையில் 10.50 லட்சம் செல்போன்களும், தலா ரூ.12,606 விலையில் 7.2 லட்சம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட உள்ளன.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஏற்கனவே கல்லூரி மாணவிகளுக்கு செல்போன், ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யோகி ஆதித்யநாத் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News