இந்தியா
மாநிலங்களவை

நீதிபதிகள் சம்பள உயர்வு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் -உறுப்பினர்கள் விவாதம்

Update: 2021-12-13 12:04 GMT
திமுக எம்பி வில்சன் பேசுகையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்  நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா கடந்த 8ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா  மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். 

அப்போது பேசிய அவர், இது மிகவும் வரையறுக்கப்பட்ட திருத்தம். இது நீதிபதிகளின் சம்பளத்தில் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஓய்வூதிய உயர்வுடன் மட்டுமே தொடர்புடையது என்றார். 

அதன்பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற எம்பிக்கள் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள், வழக்குகள் தேக்கம் குறித்து பேசினர்.திமுக எம்பி வில்சன் பேசுகையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-ல் இருந்து 70 ஆக உயர்த்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றங்களில் 57 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 75,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 62 மற்றும் 65 வயதை எட்டும் நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலையைச் சமாளிக்க மிகவும் பொருத்தமான நீதிபதிகள் என்றார்.
Tags:    

Similar News