இந்தியா
வை.கோ., மல்லிகார்ஜுன் கார்கே, திருச்சி சிவா

பாராளுமன்ற முடக்கத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கருத்து

Published On 2021-12-07 10:48 GMT   |   Update On 2021-12-07 10:48 GMT
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவையில்  12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயாபச்சன் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சிதலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான மல்லிகார்ஜுன் கார்கே,  மாநிலங்களவையில் அவை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றார். 

அவைத் தலைவரை தாங்கள் தொடர்ந்து சந்தித்து விதி எண் 256 ன் கீழ் மட்டும்தான் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய முடியும் என்று குறிப்பிட்டதாகவும் கூறினார். ஆனால் அவர்கள் சட்டவிதிகளை மதிக்காமல் தவறாக அவை நிகழ்வுகளை நடத்தியதுடன் 12 எம்.பி.க்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக மல்லிகார்ஜூன் கார்கே குறிப்பிட்டார்.

மத்திய அரசு தமக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி எந்த விவாதம் இன்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் மூத்த எம்.பி. ஆனந்த்சர்மா குற்றம் சாட்டினார்.  அவசர சட்டம் மற்றும் சட்ட மசோதா தாக்கல் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த்சர்மா  வலியுறுத்தினார்.
Tags:    

Similar News