செய்திகள்
மத்திய படை போலீசார்

சத்தீஸ்கரில் மத்திய படை போலீசார் 4 பேர் சுட்டுக்கொலை- சகவீரர் திடீர் தாக்குதல்

Published On 2021-11-08 04:42 GMT   |   Update On 2021-11-08 10:01 GMT
சத்தீஸ்கரில் மத்திய படை போலீசார் 4 பேரை சுட்டுக்கொன்ற சக வீரரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கி இருந்தனர். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பணியில் இருந்த ஒரு வீரர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இதில் 4 வீரர்கள் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கி பிடித்தனர்.

அவரை உயர் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள்.

காயம் அடைந்த வீரர்கள் உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் மத்திய படை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



Tags:    

Similar News