செய்திகள்
கோதுமை

இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நவ. 30க்கு பிறகு நீட்டிக்கப்படாது - மத்திய அரசு

Published On 2021-11-06 00:19 GMT   |   Update On 2021-11-06 00:19 GMT
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறுகையில், தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது. எனவே நவம்பர் 30-ம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News