செய்திகள்
கார்

வாகனங்களில் ஹாரனுக்கு பதில் இது தான் - விரைவில் புதிய சட்டம்

Published On 2021-10-05 07:37 GMT   |   Update On 2021-10-05 10:23 GMT
ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகனங்களிலும் ஹாரனுக்கு பதில் அந்த ஒலியை பொருத்த புதிய சட்டம் இயற்றப்பட இருக்கிறது.
நாசிக்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரத்தில் நெடுஞ்சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார். பின் அவர் பேசியதாவது:-

ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களின் சத்தம் மிகவும் எரிச்சலூட்டுகிறது. குறிப்பாக அமைச்சர்களின் வாகனங்கள் சாலைகளில் கடக்கும் போது ஒலியின் அளவை அதிகபட்சத்தில் வைத்துவிடுகின்றனர். இதுபோன்ற சத்தங்கள் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதனால், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் சைரன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு காதுக்கு இனிமையான ஒலியை பொருத்த முடிவு செய்துள்ளேன்.


ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் ஒலிக்கும் ஆகாஷ்வாணி இசையை ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களில் பொருத்தலாம் என்று நினைக்கிறேன். இந்த இசை மக்களை இனிமையாக உணர வைக்கும். இதேபோல், அனைத்து வாகனங்களிலும் புல்லாங்குழல், தபளா, வயலின், ஹார்மோனியம் போன்ற இந்திய இசைக் கருவிகளின் ஒலியை ஹாரனுக்கு பதில் பொருத்துவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

விரைவில் இதற்கான புதிய சட்டமும் இயற்றப்படும். இதைத் தவிர, மும்பை-டெல்லி இடையேயான நெடுஞ்சாலை ரூ.1 லட்சம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News