செய்திகள்
புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி

புதிய பாராளுமன்ற கட்டிட பணி - பிரதமர் மோடி நேரில் ஆய்வு

Published On 2021-09-26 18:16 GMT   |   Update On 2021-09-26 18:16 GMT
தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
புதுடெல்லி:

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை. எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என அனுமதி அளித்தது.

அதன்படி, டெல்லியில் புதிதாக அமைய உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய பாராளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணி குறித்து பிரதமர் மோடி இன்று இரவு 8.45 மணியளவில் நேரில் சென்று ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணிநேரம் கட்டுமான பணி குறித்து மோடி ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News