செய்திகள்
விநாயகர் சிலை வாங்கும் பெண்கள்.

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்- பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

Published On 2021-09-03 07:13 GMT   |   Update On 2021-09-03 07:13 GMT
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்தி உள்ளனர். 54 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சென்னை:

நாடுமுழுவதும் மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் கொரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இதையடுத்து பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷண் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை- பாதிப்பு விகிதம் வார அடிப்படையில் குறைந்து வந்தாலும் தொற்றின் 2-வது அலை பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் உள்ள 39 மாவட்டங்களில் பரிசோதனை-பாதிப்பு விகிதம் வாரத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.



38 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. டெல்டாபிளஸ் கொரோனா வைரசால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேர் கொரோனா
தடுப்பூசி
யின் 2 தவணைகளையும் செலுத்தி உள்ளனர். 54 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.

சிக்கிம், இமாச்சல பிரதேசம், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் உள்ள 18 வயதை கடந்த அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது.

அதேவேளையில் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.

கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசியை தாமாக முன் வந்து பொதுமக்கள் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

கூட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News