செய்திகள்
பசுமை லட்டு கவர்கள் விற்பனையை தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கி வைத்த காட்சி

திருப்பதியில் பசுமை லட்டு கவர்கள் விற்பனை

Published On 2021-08-23 05:42 GMT   |   Update On 2021-08-23 05:42 GMT
சோளதட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசுமை கவர்கள் ஒருமுறை பயன்படுத்தி எறியப்பட்டாலும் 90 நாட்களுக்குள் மக்கக்கூடியவை.
திருப்பதி:

திருப்பதி கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட போதிலும் ஏழுமலையான் லட்டு பிரசாதம் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்கள் 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது.

மேலும் அதற்கு மாற்றாக பல்வேறு காகிதப் பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்க தேவஸ்தானம் எளிதில் மக்கி உரமாகக்கூடிய காய்கறி கழிவுகளில் இருந்தும் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளுடன் பைகளை தயாரித்து அளிக்க முடிவு செய்தது.

இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி. ஆர்.டி.ஓ ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களைக் கண்டறிந்து அதை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவன தயாரிப்பான எளிதில் மக்கும் தன்மை வாய்ந்த மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லட்டு கவர்களை தயாரித்துள்ளது.

அதன் விற்பனை திருமலையில் நேற்று தொடங்கப்பட்டது. இதை டி.ஆர்.டி.ஓவின் தலைவர் சதீஷ் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி பழகிய மக்களுக்கு இந்த பைகள் ஒரு மாற்றாக விளங்கும்.

இந்த பசுமை கவர்கள் இயற்கைக்கும் நிலத்திற்கும் மாசு விளைவிக்காது. சோளதட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த கவர்கள் ஒருமுறை பயன்படுத்தி எறியப்பட்டாலும் 90 நாட்களுக்குள் மக்கக்கூடியவை.

இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. பல மாத பரிசோதனைக்கு பிறகு இந்த பையன்களின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News