செய்திகள்
கோப்புப்படம்

மும்பையில் பலத்த மழையால் 6000 பயணிகள் தவிப்பு

Published On 2021-07-23 06:55 GMT   |   Update On 2021-07-23 06:55 GMT
கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மும்பை:

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, தானே மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

2 வாரங்கள் தொடர்ச்சியாக மழை பெய்ததால் மும்பை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

கடந்த வாரம் மும்பையில் சுமார் 25 செ.மீ அளவுக்கு கனமழை கொட்டியது. இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 18-ந் தேதி பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும், வீடுகள் இடிந்தும் 30 பேர் பலியானார்கள்.

அதன்பிறகும் மழை ஓயவில்லை. மும்பை செம்பூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கிய நிலையிலேயே காணப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

பலத்த மழையால் ரத்னகிரி மாவட்டத்தில் சிப்லன்- காமாத்தி ரெயில் நிலையங்கள் இடையே உள்ள வசிஷ்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரெயில் பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதன்காரணமாக அந்த வழியே செல்லும் 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொங்கன் ரெயில் வழித்தடத்தில் 6 ஆயிரம் பயணிகள் ரெயில்களில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கொங்கன் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News