செய்திகள்
பிரதமர் மோடி

தடுப்பூசியே சிறந்த நம்பிக்கை -கோவின் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2021-07-05 15:41 GMT   |   Update On 2021-07-05 15:41 GMT
இந்திய நாகரிகம் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளை நிர்வகிப்பதற்காக மத்திய அரசு சார்பில் கோவின் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தடுப்பூசி போடுவது, பதிவு செய்வது, சான்றிதழ் வழங்குவது என பல பணிகள் இந்த செயலி மூலம் செயல்படுத்தப்படுகின்றன. 

மிகவும் பயன்பாடு உள்ள இந்த செயலியை பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் அனுமதி கேட்டுள்ளன. இதையடுத்து மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் கனடா, மெக்சிகோ, நைஜீரியா, பனாமா, உகாண்டா உள்ளிட்ட 50 நாடுகள் கோவின் செயலியை பயன்படுத்த உள்ளன.

இதையொட்டி சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கோவின் செயலி மாநாடு இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கான கோவின் இணையதள பயன்பாடு உலகத்திற்காக திறக்கப்படுகிறது. தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும். ஒவ்வொரு டோசும் கண்காணிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். 



தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக வெளிவர மனிதகுலத்திற்கு தடுப்பூசியே சிறந்த நம்பிக்கை. ஆரம்பத்தில் இருந்தே, எங்கள் தடுப்பூசி மூலோபாயத்தைத் திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியாவில் முடிவு செய்தோம். 

எல்லா நாடுகளிலும், தொற்றுநோயால் இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தொற்றுநோய்க்கு இணையாக எதுவும் இருந்தது இல்லை. எந்தவொரு தேசமும், அந்த நாடு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இதுபோன்ற ஒரு சவாலை தனிமையில் எதிர்கொள்ள முடியாது என்பதை இந்த அனுபவம் காட்டுகிறது. 

இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தத்துவத்தின் அடிப்படை உண்மையை பலருக்கு உணர்த்தியுள்ளது

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கோவின் செயலியை பயன்படுத்தும் நாடுகள் தங்களுக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக் கொள்ளும். இதற்கு கட்டணமோ மற்றும் நிபந்தனைகளோ கிடையாது. இலவசமாகவே இதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியா மற்ற நாடுகளுக்கும் சேவை செய்யும் நோக்கத்துடனும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் திட்டத்துடனும் கோவின் செயலியை வேறு நாடுகளும் பயன்படுத்த அனுமதித்துள்ளது.

Tags:    

Similar News