செய்திகள்
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் - ஆந்திர அரசு அறிவிப்பு

Published On 2021-05-17 23:50 GMT   |   Update On 2021-05-17 23:50 GMT
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
அமராவதி:

கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார். இதேபோன்ற அறிவிப்பினை டெல்லி முதல் மந்திரி கெர்ஜரிவாலும் வெளியிட்டார்.

ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.  அவர்களில் 11 லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை 9,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்குவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது.



நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து, ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில், கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து, ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார் என மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News