செய்திகள்
கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு: பெங்களூருவில் குறைந்த குற்ற சம்பவங்கள்... அதிகரித்த சைபர் குற்றங்கள்...

Published On 2021-05-10 02:38 GMT   |   Update On 2021-05-10 02:38 GMT
பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காரணமாக குற்ற சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சைபர் குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெங்களூருவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் தினமும் ஒரு கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, வீடுகள், கடைகளில் திருட்டு என குற்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுக்க வருவதால் போலீஸ் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குற்றங்கள் நடைபெறுவது குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது இதற்கு முன்பு ஒரு மாதத்திற்கு கொலை, கொள்ளை உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நகர் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து வீட்டு திருட்டு, இரவு நேரங்களில் நடைபெறும் கொள்ளை, பஸ் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு, மோதல் உள்ளிட்ட பல குற்றங்கள் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெங்களூரு நகரில் 70 சதவீத குற்றங்கள் நடைபெறுவது இந்த ஊரடங்கு காரணமாக குறைந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தகவல் தொழில் நுட்ப நகரான பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சைபர் கிரைம் குற்றங்கள் மட்டும் குறையாமல் அதிகரித்து வருவதாகவும் போலீசாா் கூறியுள்ளனர். ஆக்சிஜன் சிலிண்டரை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண் போலீசிடமே ரூ.9 ஆயிரம் பெற்று சைபா் கொள்ளையர்கள் மோசடி செய்திருந்தனர். இதுபோன்று, சைபர் குற்றங்கள் மட்டும் அதிகரித்து வருவதாகவும், இதற்காக மக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே கூறுகையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் வாரத்தில் 4 சங்கிலி பறிப்பு, ஒரு கொலை, கொலை முயற்சி, செல்போன் பறிப்பு மோசடி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறும். தற்போது ஊரடங்கு காரணமாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது தெற்கு மண்டலத்தில் குறைந்திருக்கிறது. மக்கள் வீட்டிலேயே இருப்பதால் பெரும்பாலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதில்லை, என்றார்.

இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் கூறுகையில், மேற்கு மண்டலத்தில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மேற்கு மண்டலத்தில் நடைபெறுவது பற்றி எனது கவனத்திற்கு வரவில்லை, என்றார்.
Tags:    

Similar News