செய்திகள்
சுற்றுலா பயணிகள் இன்றி களையிழந்து காணப்படும் கோவளம் கடற்கரை.

சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது கோவளம் கடற்கரை

Published On 2021-04-29 02:54 GMT   |   Update On 2021-04-29 02:55 GMT
கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் கோவளம் கடற்கரை வெறிச்சோடியது. இதனால் கடைகள் மூடப்பட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடங்கியது.
திருவனந்தபுரம் :

கேரளாவில் கொரோனா தொற்றின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் 2-வது அலை மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி சராசரியாக 28 ஆயிரம் கொரோனா நோயாளிகள் உருவாகும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளின் சதவிகிதம் 20 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது.

இதன் காரணமாக கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரம்பத்தில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய கேரள அரசு, பின்னர் தளர்வுகளுடன், சனி, ஞாயிறு வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது கேரள அரசு சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து உள்ளது. மேலும், தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், மதுக்கடைகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் உட்பட அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கோவளம் கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் பஜார்கள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

நடை வியாபாரிகளும், கடை வியாபாரிகளும் பொதுமக்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்கள், ஆழிமலை உட்பட ஆன்மீக சுற்றுலா மையங்கள் அனைத்துமே ஆட்கள் நடமாட்டம் இன்றி காட்சி அளிக்கிறது. கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், குமரகம் எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா வருவாய் வெகுவாக குறைந்து உள்ளது.

கேரளாவை பொறுத்தவரை சுற்றுலா துறை அன்னிய செலாவணியை ஈட்டி தருவதில் பெரும் பங்காற்றி வந்த நிலையில், கொரோனா தாக்கத்தின் 2-வது அலையால் கேரளாவின் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News