செய்திகள்
ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல்

உ.பி. ரெயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை - பியூஷ் கோயல் விளக்கம்

Published On 2021-03-29 22:16 GMT   |   Update On 2021-03-29 22:16 GMT
உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரெயில் நிலையத்தில் கேரளா கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல் மந்திரி வேண்டுகோள் விடுத்தார்.
கொச்சி:

கேரளாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள், 2 பெண்களுடன் உத்தர பிரதேசம் வழியாக கடந்த 19-ம் தேதி ரெயிலில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்த 2 பெண்களையும் கட்டாயமாக மதமாற்றம் செய்ய அழைத்துச் செல்வதாக பஜ்ரங்தள் அமைப்பினர் புகார் செய்தனர்.

இதனால் ஜான்சி ரெயில் நிலையத்தில் அந்த கன்னியாஸ்திரிகளை ரெயிலில் இருந்து இறக்கி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் மதமாற்றம் செய்ய அழைத்துச் செல்லவில்லை என்று தெரியவந்தது. இதனால் அடுத்த ரெயிலில் அவர்களை அனுப்பி வைத்தனர்.

அவர்கள் தாக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதினார். கேரளாவுக்கு பிரசாரம் செய்ய வந்த அமித்ஷா, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.



இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:

அந்த கன்னியாஸ்திரிகள் மீது சிலர் புகார் தெரிவித்தனர். அது சரியா? தவறா? என்று விசாரிக்க வேண்டியது போலீசாரின் கடமை. எனவே, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

புகார் கொடுத்த நபர்கள், கன்னியாஸ்திரிகளை ரெயிலில் இருந்து கீழே இழுத்துப்போட்டு தாக்கியதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. அவர்கள் தாக்கப்படவில்லை. முதல் மந்திரி பினராயி விஜயன் பொய்யான தகவல்களைத் தெரிவிக்கிறார் என்றார்.
Tags:    

Similar News