செய்திகள்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

கேரளாவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

Published On 2021-03-20 19:53 GMT   |   Update On 2021-03-20 19:53 GMT
கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Kerala Assembly Election, Congress, கேரளா சட்டசபை தேர்தல், காங்கிரஸ்

கேரளா சட்டசபை தேர்தல்

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் அடுத்த மாதம் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் வரிந்து கட்டிக்கொண்டு மோதி வருகின்றன.

இதனால் தேர்தல் களம் களைகட்டி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘மக்களின் தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இதில் முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் காங்கிரஸ் கட்சி கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டமான நியாய் திட்டத்தின் கீழ் வராத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதைத்தவிர அனைத்து வெள்ளை ரேஷன் கார்டுகளுக்கும் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

திருமணமான பெண்களும் அரசு வேலைவாய்ப்புகளை பெறும் பொருட்டு அரசு தேர்வுகளுக்கான வயது வரம்பில் 2 ஆண்டு தளர்வு வழங்கப்படும்.

சபரிமலை கோவிலின் பாரம்பரியத்தை காக்கும் பொருட்டு சிறப்பு சட்டம் இயற்றப்படும். ராஜஸ்தானில் இருப்பது போல அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துறை உருவாக்கப்படும்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு இலவச உணவு பொருட்கள், இலவச மருத்துவம் போன்ற வாக்குறுதிகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

முன்னதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையிலும் இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை ரூ.1,600-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News