செய்திகள்
ரமேஷ் ஜார்கிகோளி

கர்நாடக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா

Published On 2021-03-04 02:04 GMT   |   Update On 2021-03-04 02:04 GMT
ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து தனது மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்ததால் அவரது ஆதரவாளர்கள் கோகாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. எடியூரப்பாவின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு இளம் பெண்ணுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ஆபாச வீடியோ செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

இந்த ஆபாச வீடியோ, ஆளும் பா.ஜனதா அரசு மற்றும் பா.ஜனதா கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரமேஷ் ஜார்கிகோளி, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதனால் எக்காரணம் கொண்டும் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் கூறினார். மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் நேற்று கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் ரமேஷ் ஜார்கிகோளியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து மேலிட பொறுப்பாளர் அருண்சிங், ரமேஷ் ஜார்கிகோளியிடம் மந்திரி பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி மந்திரி பதவியை ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை அவர் நேற்று மதியம் பகல் 1 மணியளவில் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட எடியூரப்பா அதை ஏற்றுக்கொண்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.

ரமேஷ் ஜார்கிகோளி தனது ராஜினாமா கடிதத்தில், "என் மீது எழுந்துள்ள புகார்கள் உண்மைக்கு புறம்பானவை. இதுகுறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும். நான் நிரபராதி ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தாலும், தார்மீக பொறுப்பேற்று நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரமேஷ் ஜார்கிகோளி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால் அவரது ஆதரவாளர்கள் கோகாக்கில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் அங்கு சாலையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அப்போது ஆதரவாளர் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து காப்பாற்றினர்.

இந்த சம்பவம் அங்கு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்கள் கோகாக் நகரில் காய்கறி சந்தையை வலுக்கட்டாயமாக மூடினர். வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைத்தனர். அத்துடன் நடுரோட்டில் டயர்களை போட்டு தீவைத்து எரித்தனர்.
Tags:    

Similar News