செய்திகள்
விமான சேவை

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு

Published On 2021-02-27 18:56 GMT   |   Update On 2021-02-27 18:56 GMT
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய அரசு 2020 மே மாதம் முதல் வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. மேலும் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானங்களை மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும், சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News