செய்திகள்
அஜித்பவார்

பகல் நேர ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம்: அஜித்பவார் அறிவிப்பு

Published On 2021-02-20 01:38 GMT   |   Update On 2021-02-20 01:38 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பகல் நேர ஊரடங்கை அமல்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவித்துள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் யவத்மாலில் 10 நாள் முழு ஊரடங்கும், அமராவதியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. நேற்று முன்தினம் 5 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு நேற்று அது 6 ஆயிரத்தை கடந்தது. இதன் மூலம் கடந்த சில தினங்களாக ஆயிரம் ஆயிரமாக பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை தீவிரப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று புனே மாவட்டம் சிவ்னேரி கோட்டையில் நடந்த சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட துணை முதல்-மந்திரி அஜித்பவார், பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புனேயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 21-ந் தேதி(நாளை)நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்துகொள்ள உள்ளேன்.

சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியது.

இதுபோன்ற மாவட்டங்களில் தேவைப்பட்டால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பகல்நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதுமட்டும் இன்றி பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

சிவ் ஜெயந்தி மற்றும் பிற பண்டிகைகளை எளிமையாக கொண்டாடுமாறு அரசு விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்த மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் சிவசேனா மந்திரி சஞ்சய் ரதோடுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் புனேயை சேர்ந்த புஜா சவான் என்ற பெண் தற்கொலை வழக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அஜித்பவார், “ இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். விசாரணை நடத்த போலீசாருக்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இருக்காது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார்.
Tags:    

Similar News