செய்திகள்
சைக்கிள்கள்

அரசு வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்

Published On 2021-01-31 04:11 GMT   |   Update On 2021-01-31 04:11 GMT
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவரின் மகள், பள்ளியில் தனக்கு வழங்கிய இலவச சைக்கிளை பெற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரி:

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது. பாஜக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி பொய்வழக்கு போட்டு பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், பிர்மம் மாவட்டத்தில், பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதற்காக, அவரது மகள் அரசாங்கம் மீதான தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தன் தந்தை மீது போலீசார் பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்திருப்பதாக கூறியதுடன், அதனை கண்டிக்கும் வகையில், பள்ளியில் அரசு சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளை பெற மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த சைக்கிள் திருப்பி அனுப்பப்பட்டது.

இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசாங்கம் சார்பில் வெள்ளிக்கிழமையன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. உள்ளூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது மகள் சைக்கிளை பெற மறுத்தார். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, சைக்கிளை திருப்பி அனுப்பினோம்’ என்றார்.

‘என் தந்தை, போலீஸ் காவல் மற்றும்  நீதிமன்ற காவலில் இருந்தபோது நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம்’ என்கிறார் அந்த மாணவி. 

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தந்தையின் தூண்டுதலின் பேரில் அந்த மாணவி சைக்கிளை பெற மறுத்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
Tags:    

Similar News