செய்திகள்
எடியூரப்பா

சிவமொக்கா வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா

Published On 2021-01-23 03:41 GMT   |   Update On 2021-01-23 03:41 GMT
சிவமொக்கா வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

சிவமொக்கா மாவட்டம் ஹுனசோடு கிராமத்தில் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் பலியானார்கள். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டம் ஹூனசோடு கிராமத்தில் ஜெலட்டின் குச்சிகள் ஏற்றி சென்ற லாரி வெடித்தது. இந்த சம்பவத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி அங்கு விரைகிறார். வெடிகுண்டு தடுப்பு குழுவினர் சிவமொக்கா சென்று ஆய்வு செய்கிறார்கள்.

நானும் நாளை (அதாவது இன்று) சிவமொக்கா சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அங்கு நடைபெறும் சட்டவிரோத கல்குவாரி தொழில்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எந்த தயவு தாட்சண்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பிரதமர் மோடியும் தனது கவலையை பகிர்ந்து கொண்டுள்ளார். மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம சுரங்க தொழில்களை தடுப்போம். இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News