செய்திகள்
கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்

கேரள சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2021-01-21 09:17 GMT   |   Update On 2021-01-21 09:17 GMT
கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  எம்எல்ஏ உமர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பின்னர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின்போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், துணை சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து விவாதத்தை கவனித்தார். 

விவாதத்திற்கு பிறகு சபாநாயகர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் மெஜாரிட்டி இல்லாத நிலையில், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. 
Tags:    

Similar News