செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு எடுத்து வர தடை - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

Published On 2021-01-09 14:24 GMT   |   Update On 2021-01-09 14:24 GMT
பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பிற மாநிலங்களில் இருந்து உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு எடுத்து வர தடை விதித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு பறவைகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டு, பறவை காய்ச்சலின் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் தற்போது தீவிர நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


இதனை தொடர்ந்து அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள கோழி, வான்கோழி, வாத்து உள்ளிட்ட பறவை பண்ணைகளில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பஞ்சாப் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தை கட்டுபடுத்தப்பட்ட பகுதியாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து கோழிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15 வரை தடை விதிக்கப்படுவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி காசிப்பூரில் உள்ள மிகப்பெரிய இறைச்சி கூடங்களை மூடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு இறக்குமதி செய்ய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் இதுவரை பறவை காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 104 பறவை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News