செய்திகள்
பிரணாப் முகர்ஜி

மன்மோகன்சிங், சோனியாவால் நியமிக்கப்பட்டவர் : மோடி, மக்கள் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் - தனது புத்தகத்தில் பிரணாப் புகழாரம்

Published On 2021-01-07 00:59 GMT   |   Update On 2021-01-07 00:59 GMT
மன்மோகன்சிங், சோனியா காந்தியால் பிரதமராக நியமிக்கப்பட்டவர், மோடியோ மக்கள் ஆதரவுடன் பிரதமராக ஆனவர் என்று தனது புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி வரை ஜனாதிபதியாக இருந்தார். அப்பதவியில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி இருந்தார்.

மறைவுக்கு முன்பே அவர் எழுதி முடித்த அந்த புத்தகம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல், இருவகையில் வரலாற்று சிறப்புமிக்கது. ஒன்று, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மையுடன் தெளிவான தீர்ப்பை வாக்காளர்கள் அளித்தனர். இரண்டாவது, பா.ஜனதா முதன்முதலில் தனிப்பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதன்மூலம், வாக்காளர்கள், ஸ்திரத்தன்மையை விரும்புவது தெரிகிறது. ஸ்திரத்தன்மை இருந்தால்தான், வளர்ச்சி திட்டங்களை பெற முடியும். மேலும், கூட்டணி ஆட்சிகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஏனென்றால், அற்ப காரணங்களுக்காக கட்சிகள் அடிக்கடி கூட்டணி மாறுகின்றன. ஒரு குறிப்பிட்ட கட்சியையோ, நபரையோ ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்குத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், கூட்டணி கட்சிகளும் சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தன. ஆனால், அதை சோனியா நிராகரித்தார். அவரால் பிரதமராக நியமிக்கப்பட்டவர், மன்மோகன்சிங்.



ஆனால், பிரதமர் மோடி, மக்கள் ஆதரவுடன் பிரதமர் ஆனவர். பா.ஜனதாவை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு அழைத்துச்சென்று பிரதமர் ஆனார். குஜராத் முதல்-மந்திரியாக அவர் நற்பெயரை கட்டமைத்து இருந்தார். அது மக்களிடையே எடுபட்டது. அவர் பிரதமர் பதவியை சம்பாதித்து அடைந்தார்.



மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய காங்கிரஸ் தவறியதுதான் அந்த தேர்தலில், காங்கிரஸ் தோற்க காரணம். பிரசாரம் முடிந்தவுடன், காங்கிரஸ் தலைவர்கள் பலா் என்னை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர். பெரும்பான்மை கிடைக்கும் என்று யாருமே நம்பிக்கை தெரிவிக்கவில்லை.

ஆனால், பா.ஜனதா பொருளாளராக இருந்த பியூஸ் கோயல், பா.ஜனதாவுக்கு 265 முதல் 280 இடங்கள் கிடைக்கும் என்று கூறினார். அந்த எண்ணிக்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்,. மோடியின் திட்டமிடலையும், கடின உழைப்பையும் பார்த்து ஈர்க்கப்பட்டேன். மோடியுடன் எனக்கு சுமுக உறவு இருந்தது. அதே சமயத்தில், அவருடனான சந்திப்புகளில், கொள்கை விஷயங்களில் அறிவுரை வழங்க நான் தயங்கியது இல்லை. எத்தனையோ தடவை எனது கவலைகளை தெரிவித்துள்ளேன்.

மோடிக்கு வெளியுறவு கொள்கையில் அனுபவம் கிடையாது. ஆனால், அதன் நுணுக்கங்களை விரைவாக புரிந்து கொணடார்.

தனது பதவி ஏற்பு விழாவுக்கு ‘சார்க்’ நாடுகளின் தலைவர்கள் உள்பட பல தலைவர்களை அழைத்தார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபையும் வரவழைத்தார். இதற்கு முன்பு எந்த பிரதமரும் இதை முயற்சித்து பார்க்கவி்ல்லை. அவரது அணுகுமுறை, வெளியுறவு கொள்கையில் ஜாம்பவான்களாக இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
Tags:    

Similar News