செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி... விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-01-03 06:17 GMT   |   Update On 2021-01-03 06:17 GMT
தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்  நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை அவசரகால நோக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறி உள்ளது. 

இதனையடுத்து இந்த இரண்டு மருந்துகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய மைல்கல் ஆகும்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவக்குவதில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘வாழ்த்துக்கள் இந்தியா. கடினமாக உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும். மேலும் சுயசார்பு இந்தியாவின் கனவை நிறைவேற்ற, நமது விஞ்ஞான சமூகத்தின் ஆர்வத்தை இது காட்டுகிறது. 

டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், விஞ்ஞானிகள், காவல்துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து கொரோனா முன்கள வீரர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக நாம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.
Tags:    

Similar News